தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் நேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் ஒமைக்ரான் உட்பட அனைத்து வகையான கொரோனா பாதிப்புகளையும் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணித்து தனிமைப்படுத்தி அவர்களுக்கு பரிசோதனை எடுக்க வேண்டும்.
கடந்த இரண்டு வாரங்களாக பல மாநிலங்களில் திடீரென்று தொற்று பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை சென்னையில் இரண்டு வாரங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தொற்று பரவாத வகையில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நகர்ப்புறங்களிலும், ஊரகப் பகுதிகளிலும் மருத்துவமனை அளவிலான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். தடுப்பூசிகளை விரைந்து மக்கள் அனைவருக்கும் செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் நோய்தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று அதில் தெரிவித்தார்.