சபரிமலைக்கு செல்லும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பெண்ணியவாதிகள் பிந்து மற்றும் ரெஹனா பாத்திமா ஆகியோர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எ.பாக்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்கள் மீது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இறுதியானது அல்ல எனவும்,7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
எனவே இந்த மனுக்கள் மீது தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்கமுடியாது என தெரிவித்த தலைமை நீதிபதி 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விரைவில் அமைக்கப்பட்டு வழக்கு விசாரிக்கபடும் எனவும் அதுவரை பொறுமை காக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.இதுபோன்ற விவகாரங்கள் நம் நாட்டில் பூதாகரமாக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி இந்த விவகாரம் உணர்வுபூர்வமானது எனவும் தெரிவித்தார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்ற எந்த தடை உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் தான் தங்கள் உரிமையை கேட்பதாக முறையிட்டார்.
அதனை கேட்ட தலைமை நீதிபதி நீதிமன்ற உத்தரவு சாதகமாக இருந்தாலும் இந்த விவகாரம் உணர்வு சார்ந்த விவகாரம் என்பதால் பொறுமையாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்லக் கூடாது என்றோ அனுமதிக்கக் கூடாது என்றோ நாங்கள் கூறவில்லை என குறிப்பிட்ட தலைமை நீதிபதி. தற்போதைய சூழலில் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்ததுடன் மறுஆய்வு மனுக்களை விசாரிக்க விரைவில் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.