திருவெற்றியூர் கிராம தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், அமைச்சர் அன்பரசன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இரவில் கீரல் விழும் சத்தம் கேட்டதாகவும், காலை 10 மணி அளவில் மக்கள் குடியிருப்பை விட்டு வெளியேறிய நிலையில் 10.20 மணிக்கு குடியிருப்பு முழுவதும் இடிந்து விழுந்ததாக கூறுகின்றனர். வீடுகளை இழந்த மக்கள் தற்போது மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை வழங்கும் பணி தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்குள் அவர்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்படும் எனவும், அதற்கான பணி தொடங்கி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குடியிருப்பு 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம், 24 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. அதற்கு அருகிலுள்ள குடியிருப்புகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெறும் என்று அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் சீரமைக்க படாததால் திருவொற்றியூரில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இந்த குடிசை மாற்று வாரியம் கட்டிட விபத்துக்கு முந்தைய ஆட்சியாளர்கள் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.