முஸ்லீம் பெண் பருவமடைந்தவுடன் அவள் விருப்பப்படி யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 33 வயது இந்து இளைஞரை திருமணம் செய்தார் 17 வயது முஸ்லிம் பெண்.. ஆனால் இந்த திருமணத்திற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இந்த தம்பதியரின் பாதுகாப்பு கேள்விக்குறியானது..
இதையடுத்து முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு மனுவை தாக்கல் செய்தனர்.. இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முஸ்லீம் தனிப்பட்ட சட்டத்தின்படி, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி பருவமடைந்ததும் அவர்கள் திருமணம் செய்ய தகுதியானவர்கள். எனவே 15 வயது முதலே பெரியவர்களாக அவர்கள் கருதப்பட வேண்டும்..
மனைவி மற்றும் கணவன் இருவரும் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள், எனவே அவர்கள் ஒருவரையொருவர் முறைப்படி திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பைக் கோருகிறார்கள் என்று அவர்களின் வழக்கறிஞர் வாதிட்டார்.. அந்த பெண்ணின் பெற்றோர் தரப்பிலும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன..
இரு தரப்பையும் விசாரித்த நீதிபதி ஹர்னரேஷ் சிங் கில், அப்பெண்ணுக்கு ஆதரவாக, முஸ்லீம் பெண் பருவமடைந்தவுடன் அவள் விருப்பப்படி யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற உரிமை இருக்கிறது. அப்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் பாதுகாவலர் அவர்களின் (தம்பதியர்) முடிவில் தலையிட உரிமை இல்லை என்று கூறி தம்பதியரை பாதுகாக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்..
முஸ்லீம் பெண்ணின் திருமணம் முஸ்லீம் தனிநபர் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது என்பது சட்டம் தெளிவாக உள்ளது. ‘சர் டின்ஷா பர்துன்ஜி முல்லாவின் முகமதிய சட்டத்தின் கோட்பாடுகள்’ என்ற புத்தகத்தின் பிரிவு 195ன் படி, மனுதாரர் எண்.1 (பெண்) 17 வயதுடையவராக இருப்பதால், அவர் விருப்பப்பட்ட ஒருவருடன் திருமணம் செய்துகொள்ள தகுதியானவர். மனுதாரர் எண். 2 (அவரது பங்குதாரர்) சுமார் 33 வயதுடையவர் எனக் கூறப்படுகிறது. எனவே, மனுதாரர் எண். 1, முஸ்லீம் தனிநபர் சட்டத்தால் எதிர்பார்க்கப்படும் திருமண வயதை எட்டியவர்,” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், மனுதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டதால், மனுதாரர்களின் அச்சத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும். எனவே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அவர்கள் பறிக்க முடியாது” என்று கூறினார்..
குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்து அனைத்து மதங்களிலும் உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதாக 18 வயதிலிருந்து 21ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.. இந்த விவாதத்திற்கு மத்தியில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.