லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலமான லூதியானாவில் உள்ள கீழமை கோர்ட் வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று குண்டு வெடித்தது. அதாவது கோர்ட் வளாகத்தில் உள்ள 2-வது தளத்தின் கழிவறையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பின்போது ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் பலத்த காயமடைந்தனர்.இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு, தேசிய பாதுகாப்பு படை உள்பட பல்வேறு அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டன.
இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர் பஞ்சாப் காவல் துறையில் வேலை பார்த்த கனங்தீப் சிங் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லூதியானாவின் ஹனா பகுதியை சேர்ந்த கனங்தீப் சிங் மாநில காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றியுள்ளார். இதனிடையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கிலும், போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் கனங்தீப் சிங்கிற்கு தொடர்பு இருந்ததை அடுத்து அவர் 2019 ஆம் ஆண்டு தலைமை காவலர் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதியில் கிடந்த செல்போன் சிம்கார்டு உதவியுடன் உயிரிழந்தது கனங்தீப் சிங் என்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக கனங்தீப் சிங் நடத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கோர்ட் கழிவறையில் வைத்து வெடிகுண்டை பொருத்தும்போது எதிர்பாராத விதமாக திடீரென்று அங்கேயே வெடிகுண்டு வெடித்து இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.