இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் 350 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 57 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து மாநில அரசுகள் மீண்டும் ஊரடங்கு விதிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசம், ஒடிசா, குஜராத், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
அதனைப்போலவே ஹரியானா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப் படுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஹரியானாவில் புதிய பாதுகாப்பு கட்டுப்பாடு நடவடிக்கையாக ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.