நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரை சேர்ந்த ஜெயா என்பவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் நீட் தேர்வு எழுதினார். ஆனால் தேர்வில் 69 மதிப்பெண் மட்டுமே பெற்று அவர் தோல்வியடைந்தார். இதன் காரணமாக மன வருத்தத்துடன் இருந்த அவரை அவரின் பெற்றோர்கள் திருப்பூரில் உள்ள அக்கா வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சில வாரங்கள் இருந்த ஜெயா தனது பெற்றோரைப் பார்த்துவிட்டு வருவதாக கூறி பாரதி நகருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். மேலும் தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் “நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால், என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளேன். அம்மா…. என்னை மீண்டும் மன்னித்துவிடு” என்று உருக்கமாக எழுதியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .