மாணவிகளின் வருகைப்பதிவேட்டில் சாதி பெயர் இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 9-ஆம் வகுப்பில் இருக்கும் 6 பிரிவுகளில் 300 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கான வருகை பதிவேட்டில் அவர்களது சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியையான பொன்முடியிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகளின் கல்வி உதவித் தொகைக்காக வருகை பதிவேட்டில் கணக்கெடுக்கும் வகையில் அவர்களது சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அதன்மூலம் தகுதியான மாணவிகளின் பட்டியலை தயாரித்து வந்துள்ளனர்.
மேலும் அலுவலக பயன்பாட்டிற்காக மட்டுமே மாணவிகளின் வருகைப்பதிவேட்டில் சாதி பெயரை குறிப்பிட்டிருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வருகை பதிவேட்டில் இருந்த சாதி பெயர்களை உடனடியாக நீக்கி விட்டனர். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் ஆனந்தன் உத்தரவிட்டுள்ளார்.