தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் ஒன்றியத்தில் கடந்த 21-ஆம் தேதியன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில், பேச்சாளரை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேடையிலேயே கடுமையாகத் தாக்கினர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயக முறையில் நடந்த அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டத்தில், இவ்வாறு திமுக-வினர் அராஜகத்தில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியினரைத் தடுக்காமல், அங்கிருந்த காவல்துறை கைகளைக் கட்டியபடி வேடிக்கை பார்த்தது ஜனநாயகப் படுகொலை ஆகும்.
அம்மாவின் அரசு ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக முறையில் செயல்பட அனுமதிக்கப்பட்டது. கடந்த வருடங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் நரகல் நடையில் அம்மாவின் அரசையும், எங்களையும் விமர்சித்தவர்கள் திமுக-வினர் தான் ஆவார்கள். எப்போதும் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் போன்றவற்றின் குத்தகைதாரர்கள் தாங்கள் தான் என்று தம்பட்டம் அடித்த ஸ்டாலின் அவர்கள் இன்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் அவரது கட்சியினர் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
மேலும் எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள், மக்களின் நலன் விரும்பிகள், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் குரல் வளையை நெறிக்கிறார்கள்.
தற்போது உள்ள விடியா அரசில் தமிழகத்திலுள்ள உண்மையான எதிர்க்கட்சிகள் ஜனநாயக முறையில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை பார்த்து மக்கள் கொதித்துப்போய் உள்ளனர். தர்மபுரி சம்பவத்தில் ஈடுபட்ட திமுக-வினர் மீதும், இந்த அராஜகத்தைத் தடுக்கத் தவறிய அங்கிருந்த காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக காவல்துறை தலைவர் அவர்களை வற்புறுத்துகிறேன். கடந்த 21.12.2021 அன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோதவாடியில் நடைபெற்ற விழாவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் அவர்களை கலந்துகொள்ள அழைத்துள்ளனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் மகளிர் மீதும் திமுக-வினர் தாக்குதல் நடத்தினர். எனினும் தாக்குதலுக்குள்ளான சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் மீதே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது விந்தையாக இருக்கிறது. இனிமேலாவது விடியா அரசின் முதலமைச்சர், சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்று இல்லாமல் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள், மக்களின் நலன் விரும்பிகள், சமூக ஊடகங்கள் போன்றவை ஜனநாயக முறையில் பொதுக்கூட்டம் நடத்துவதையும், கருத்துக்கள் வெளிப்படுத்துவதையும் காவல்துறையினரை வைத்தும், தனது கட்சியினரை வைத்தும் தடுக்க நினைப்பதை கைவிட வேண்டும். இல்லையெனில் இந்த அராஜகப் போக்கை எதிர்த்து பொதுமக்களே வீதியில் இறங்கி போராடும் நிலை ஏற்படும்” என்று பழனிசாமி எச்சரித்துள்ளார்.