இந்தியா முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக பரவி வந்தது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்கு அறிவித்தது. மேலும் பல்வேறு நோய்த்தடுப்பு பணிகளையும் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகவருகிறது. மேலும் தடுப்பூசிகளின் பயன்பாட்டால் தான் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த தாக்குதலாக உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது.
டெல்டா வகை வைரசை விட ஒமைக்ரான் தொற்று 3 மடங்கு அதிகமாக பரவும் தன்மை கொண்டது என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது. அதனால் தடுப்பூசிகள் செலுத்தும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுவையில் சட்டப்பேரவை அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை அலுவலகத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு சட்டப்பேரவை அலுவலகத்திலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள் சட்டப்பேரவை அலுவலகத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஏற்கனவே புதுச்சேரி சுகாதாரத்துறை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆவணம் எல்லா இடங்களிலும் கட்டாயம் கேட்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.