மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மதுரை மாவட்டம் நெல்பேட்டை பகுதியில் பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் மதுரை விளக்குத்தூண் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்த சரவணன் என்பவர் பலியானார். கண்ணன் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இடிந்து விழுந்த கட்டிடம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கட்டிடத்தின் உரிமையாளரான கீழ்வெளி வீதியை சேர்ந்த முகமது இத்ரீஸ் அந்தக் கட்டிடத்தை வாடகைக்கு விட்டுள்ளது தெரியவந்தது.
இதை தொடர்ந்து கட்டிட உரிமையாளர் முகமது இத்ரீஸ் மற்றும் அந்த கட்டிடத்தில் பூச்சி மருந்து கடை வைத்து நடத்தி வரும் நான்கு பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியும், அதை மீறி அங்கு இருந்ததால் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.