மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பொய்கைநல்லூரில் மணிமாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஹரிஹரன் என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் மணிமாறன் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரும் தங்களது நண்பர் மனோஜ்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது நண்பர்கள் மூவரும் தெற்கு பொய்கைநல்லூர் பைலட் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள வேகத்தடையில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
இதில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் படுகாயமடைந்த ஹரிஹரன் மற்றும் மனோஜ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஹரிஹரன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து மனோஜ்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.