மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு மலை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாச்சலூர் கிராமத்தில் இருக்கும் பள்ளி வளாகத்தில் 5-ஆம் வகுப்பு படிக்கும் பிரித்திகா என்ற மாணவி உடல் கருகி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாணவியின் சாவில் உண்மை நிலவரம் தெரிந்த பின்னரே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைகாட்டி என்ற இடத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.