உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் நகரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கூடிய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது மோடி பேசியதாவது “மத்திய அரசு ஒரு முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக உள்ளது. இதை 21 ஆக உயர்த்தத் திட்டமிட்டு இருக்கிறோம். பெண் குழந்தைகளுக்கு படிக்க அவகாசம் தர வேண்டும். அதனால்தான் திருமண வயது 21 ஆக உயர்த்துகிறோம்.
இதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால் பெண்கள் உங்களை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். 5 வருடத்திற்கு முன்பு வரை உத்தரபிரதேசத்தில் மாபியா ராஜ்யமும், குண்டாஸ் ராஜ்யமும்தான் நடந்து கொண்டிருந்தது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தான். ஆனால் உங்களால் எதுவுமே செய்ய முடியாத நிலை இருந்தது. நீங்களே காவல் நிலையத்திற்கு சென்றால் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், கிரிமினல்களுக்கு ஆதரவாகவும் போன் அழைப்புகள் போலீஸ் நிலையத்திற்கு வந்து விடும்.
ஆனால் யோகி இந்த கிரிமினல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தங்களை நீண்ட காலத்துக்கு விடுகளுக்குள்ளேயே அடைக்க முடியாது என்பதை பெண்கள் உணர்ந்து விட்டனர். முந்தைய அரசுகள் இவர்களுக்கு எதையும் செய்யவில்லை. ஆனால் இன்று எந்த கட்சி தங்களது நலனுக்காக உள்ளது என்பது பெண்கள் உணர்ந்து உள்ளனர்” என்று மோடி பேசினார். இதனிடையில் பெண்களுக்கான திருமண வயதை உயர்த்துவதை காங்கிரஸ், சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.