பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கஞ்சம்பட்டி பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் பொன்னுசாமி வெடி மருந்துகளை பாதுகாப்பற்ற முறையில் ஒரு விவசாய தோட்டத்தில் வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது விஜய்பாபு என்பவரது தோட்டத்தில் இருக்கும் மோட்டார் அறையில் 1308 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 200 அடி நீளமுள்ள ஒயர்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து குவாரி உரிமையாளர் பொன்னுசாமி, மேலாளர் கனகராஜ், தோட்டத்தின் உரிமையாளர் விஜய்பாபு ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 17 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.