சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சில பகுதிகள் குறுகலாக காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் குழிதோண்டி தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நந்தகுமார் பாலம் பகுதியில் சாலை விரிவாக்க பணி நடந்து கொண்டிருந்த போது திடீரென சாலையோரம் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அந்த இடத்தில் வாகனங்கள் செல்லாமல் இருப்பதற்காக தடுப்புகள் வைத்துள்ளனர். மேலும் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு காட்டேரி வழியாக அரசு பேருந்துகள், சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் குன்னூரில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்திற்க்கு திருப்பி விடப்பட்டுள்ளன.