தரைப்பாலம் சேதமடைந்ததால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
திருப்பத்தூரில் இருக்கும் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் மாதனூர் தரைப்பாலம் உடைந்துள்ளது. இந்நிலையில் மாதனூரில் இருந்து குடியாத்தம் செல்லும் பொதுமக்கள் பள்ளிகொண்டா வழியாக சென்று வருகின்றனர். இதைப் போல் ஆம்பூர் பச்சகுப்பம் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் குடியாத்தம் செல்லும் வழியில் உள்ள ரெட்டிமாங்குப்பம் உள்பட 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நரியம்பட்டு பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினால் ஆம்பூரில் இருந்து நரியம்பட்டு வழியாக குடியாத்தம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பின்னர் கானாறு மற்றும் பாலாற்றுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணத்தினாலும் பாலங்கள் சேதமடைந்திருப்பதால் 100-க்கும் அதிகமான கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் பணிக்கு செல்லும் பணியாளர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதன் காரணத்தினால் இவர்கள் தொலை தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தை அறியாமல் தண்ணீரில் கடந்து செல்கின்றனர். மேலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் உடனடியாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.