சாலையோர கடைகளை அகற்ற வந்த அதிகாரிகளை எதிர்த்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் அருகே சாலையோர வியாபாரிகள் 40 ஆண்டுகளாக காய்கறி, பழம் மற்றும் காலணிகள் போன்ற 98 சிறு கடைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விம்கோ நகர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த பகுதியிலுள்ள சாலையோர கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில்வேதுறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் போன்றோர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கடைகளை அகற்றுவதற்காக அங்கு சென்றுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் பொது வர்த்தக சங்க தலைவரான ராமசாமி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஜே.சி.பி. எந்திரம் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல ஆண்டுகளாக சாலையோரம் வியாபாரம் செய்து வரும் தங்களை அப்புறப்படுத்தினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். எனவே சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் செய்வதற்காக மாற்று இடம் ஒதுக்கித் தரும் வரை, கடைகளை இடிக்க விடமாட்டோம் என கூறியுள்ளனர்.
அப்போது பானுமதி என்ற பெண் வியாபாரி திடீரென மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்த அதிகாரிகள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து சென்று மாற்று இடம் வழங்குவதற்கான நிலத்தை காண்பித்தனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு அதே பகுதியில் சந்தைக்கு அருகே உள்ள காலி நிலத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அதிகாரிகள் அங்குள்ள கடைகளை அகற்றாமல் திரும்பி சென்றுவிட்டனர்.