காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கிவரும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் பூந்தமல்லி அருகே உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர். புதன்கிழமை விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் இருந்துள்ளது. இதை சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட பெண்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் பெரும்பாலானோர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் சில பெண்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களின் நிலை குறித்து தற்போது வரை நிறுவனம் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் அந்த பெண்களின் நிலை என்ன என்பதை கேட்டு சுமார் 2 ஆயிரம் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் மருத்துவமனையிலிருந்து பெண்களிடம் வீடியோகால் மூலம் பேசி காண்பித்து, தொழிற்சாலை விடுதி வார்டன் மீது வழக்குப்பதிவு செய்து விடுதி தரத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளனர். சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பிறகு வாபஸ் பெறப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.