உருமாறிய கொரோனா தொற்றான வைரஸ் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனி பிரிட்டன் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 20-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஒமைக்ரான் பரவல் காரணமாக மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இந்தநிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 3 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தபடுமா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இதுபற்றி விளக்கமளித்த மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர், ஸ்ரீனிவாசராவ் அதிகபட்சமாக உள்ளூர் அளவில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆனால் எதிர்காலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. சுயகட்டுப்பாடு மற்றும் தனிப்பட்ட அளவில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்வது ஒமைக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். அதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்ற விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.