பட்டா கேட்டு தாய் மற்றும் மகன் இருவரும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட ஆண்டவர் நகர் பகுதியில் கடந்த 1989-ஆம் ஆண்டு வறுமை கோட்டுக்கு கீழ் வசித்து வரும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டுமனை பட்டா அரசின் சார்பாக வழங்கப்பட்டது. இவ்வாறு பட்டா பெற்ற பலர் அங்கு வீடுகள் கட்டி குடியேறினர். எனினும் பலர் வீடுகள் கட்டாமல் இருக்கின்றனர். மேலும் சிலர் தங்களுடைய வீட்டுமனைகளை பிறருக்கு விற்றுவிட்டு சென்று விட்டனர். இதனையடுத்து வீட்டுமனை வாங்கியவர்கள் அந்த இடத்தில் வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர்.
இதன் காரணமாக அந்த இடத்தை வாங்கியவர்கள் தங்களுடைய பெயருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். அதன்பின் அங்கு வீடு கட்டியவர்களுக்கு புதிதாக வீட்டுமனை பட்டா கொடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கிடையில் அங்கு பெரும்பாலான வீட்டுமனைகளில் யாரும் வீடு கட்டாமல் காலியாக உள்ளது என தாசில்தார் ரவிச்சங்கருக்கு பல புகார்கள் பெறப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு ஆய்வு செய்வதற்காக தாசில்தார் ரவிசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் காவல்துறையினர் சென்றனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ், தனது தாயாருடன் சாலையில் உட்கார்ந்து தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்போம் என்றும் மிரட்டல் விடுத்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்கள் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை வாங்கி தடுத்து நிறுத்தினர். அதன்பின் அவர்களிடம் தாசில்தார் கூறியபோது “வீட்டுமனை கேட்டு புதிதாக விண்ணப்பம் கொடுங்கள். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.