ராகிங்கில் ஈடுபடமாட்டேன் என்று கூறினால் மட்டுமே அட்மிஷன் கிடைக்கும் என அண்ணா பல்கலைக்கழக உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த பிரச்சினை காரணமாக முதலாம் ஆண்டு படிக்கும் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. இதனால் கல்லூரிகளில் ராகிங்கை கட்டுப்படுத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கண்டிப்பாக கூறிய போதிலும் பல கல்லூரிகளில் ராகிங் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. எனவே இவற்றை கட்டுப்படுத்த பல்கலைக்கழகங்கள் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: ” ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆன்லைனில் பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.www.antiragging.in என்ற இணையதளத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேற்கண்ட இணைய தளத்தில் பதிவு செய்து பல்கலைக்கழகம் சிறப்பு அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் இது பொருந்தும் ” என்று தெரிவித்துள்ளது.