வனப்பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்ததிருந்த 2 பேரை கைது செய்த போலீசார் 75 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள பண்டாரவூத்து வனப்பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து ரகசியமாக விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்படி ஆண்டிபட்டி துணை சூப்பிரண்டு அதிகாரி தங்க கிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் பண்டாரவூத்து வனப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பளியன்பாறை என்ற இடத்தில் 3 மூட்டைகளில் சுமார் 75 கிலோ கஞ்சா இருப்பதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அதனை பறிமுதல் செய்த போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் கஞ்சாவை வனப்பகுதியில் பதுக்கியது பண்டாரவூத்தை சேர்ந்த ஜோதிபாசு, மதுரையை சேர்ந்த உதயன் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் கஞ்சா விற்பனையில் உசிலம்பட்டியை சேர்ந்த விஜி, காளப்பன்பட்டியை சேர்ந்த செல்வேந்திரன் ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாகியுள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.