ஒமிக்ரான் வைரஸ் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒமிக்ரான் வைரஸ் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது என்று கூறியுள்ளார். இதனையடுத்து டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போரிஸ் ஜான்சன் தொலைக்காட்சி மூலம் உரையாற்றியபோது ” ஒமிக்ரான் வைரஸ் பெரிய அளவில் பரவ ஆரம்பித்துள்ளது. எனவே விரைவில் இது நாடு மழுவதும் பரவிவிடும். இந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். ஒமிக்ரான் பரவலை அவசர நிலையாக அனைவரும் கருதவேண்டும். கடந்த கால அனுபவங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஒமிக்ரான் வைரஸ் வேகம் அதிகமாக இருப்பது கவலைக்குரியது” என்று அவர் கூறினார். இங்கிலாந்தில் கடந்த ஜூன் மாதம் 3-வது அலையில் கொரோனா நன்கு மட்டுப்பட்டது. அதன்பின் புதிய கேஸ்கள் வருகை அடியோடு குறைந்தது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு நீக்க தொடங்கியது. ஆனால் தற்போது கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் தொற்றால் இங்கிலாந்துக்கு மீண்டும் சிக்கல் வந்துவிட்டது. சமுதாயப் பரவல் அளவுக்கு ஒமிக்ரான் பரவல் வந்துவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டெல்டாவை விட ஒமிக்ரான் வேகமாக வருவதாகவும், அதேசமயம் தடுப்பூசி செலுத்தியோருக்கு அறிகுறிகள் மைல்டாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையில் பூஸ்டர் டோஸைப் பொறுத்தவரையில் பைசர் மற்றும் மாடர்னா பூஸ்டர் டோஸ்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இந்த தடுப்பூசிகளை ஏற்கனவே செலுத்திக் கொண்டோர் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதே சமயம் ஆஸ்டிரஜெனகா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸும் கூட பாதிப்பை குறைப்பதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை டிசம்பர் மாத இறுதிக்குள் செய்ய வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதை உறுதிப்படுத்த நாடு முழுவதும் 42 இராணுவக் குழுக்களை அரசு அனுப்பியுள்ளது.
இவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்துவதை கண்காணித்து வருவார்கள். இதை தவிர பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்காக கூடுதல் மையங்களையும் அரசு ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடமாடும் மையங்களுக்கும் இதற்காக ஏற்படுத்தப்பட்டு வாரம் முழுவதும் இந்த மையங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால் அதிக அளவில் பாதிப்பை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். இங்கு இதுவரை 1,46.000 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசி செலுத்துவதை இங்கிலாந்து அரசு தீவிரப்படுத்தியது. இங்கிலாந்து முழுவதும் பொது வெளிகளில் உள்ள உள்ளரங்குகளில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோருக்கு முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் இருந்து பணியாற்றுவதை மக்கள் தொடர வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.