தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10,000 ரூபாய் பொங்கல் கருணை தொகையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டும் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. அதேபோல தமிழக அரசு துறையில் பணியாற்றும் சில ஊழியர்களுக்கு இந்த பொங்கல் படி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலக உதவியாளர்களுக்கு 10,000 ரூபாய் பொங்கல் கருணை தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க ஊழியர்கள் டிசம்பர் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்தினர். அந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார். தொடர்ந்து 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலக உதவியாளர்களும் ரூபாய் பத்தாயிரம் கருணைத் தொகை வழங்குவது, டி பிரிவு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்துவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது, சுகாதாரத்துறையில் தற்காலிக பணியிடங்களுக்கு நிரந்தர பணி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை முன்னிறுத்தி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.