உலக சுகாதார அமைப்பு “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்த உலக நாடுகள் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு படிப்படியாக முன்னேறி வருகிறது. இந்த நிலையில் அண்மையில் தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கியுள்ள “ஒமிக்ரான்” வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் விட்டுவைக்கவில்லை.
இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது “ஒமிக்ரான்” வைரஸ் டெல்டா வகை மற்றும் ஏனைய வகை கொரோனா வைரஸ்களை விட வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாக WHO தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் பிற கொரோனா வைரஸ்களை விட ஒமிக்ரான் வைரஸ் மாறுபட்டவை என்பதனை உறுதி செய்வதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை.
இருப்பினும் ஒமிக்ரான் வகை வைரஸ் கொரோனா தடுப்பூசியின் திறனை குறைக்கும் தன்மை கொண்டிருப்பதால் அதனுடைய பரவல் விகிதம் அதிகரிக்கும் என்று உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஒமிக்ரான் சிகிச்சைக்கு எவ்வாறு கட்டுப்படும் ?தீவிரமான உடல்நல பாதிப்பை ஏற்படுத்துமா ? எந்த அளவு வீரியமானது ?என்பதை கண்டறிய சில காலங்கள் தேவைப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.