பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அசாஞ்சேவை விடுவிக்க வேண்டுமென்று அவரின் காதலி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை விக்கிலீக்ஸ் என்னும் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதிலும் அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு லண்டன் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் தடை விதித்தது.
ஆனால் இதனை இங்கிலாந்து மேல்முறையீட்டு நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தது. எனவே அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும் அவரின் ஆதரவாளர்கள் நாடு கடத்துவதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசாஞ்சேவிற்கு பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளதாக அவரின் காதலி ஸ்டெல்லா மோரிஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்காக அசாஞ்சே காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. தற்போது வரை அவர் அந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை விடுவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.