பூச்சி மருந்தை முகர்ந்து பார்த்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள நாகலகவுண்டன்பட்டியில் சந்தன குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், துர்கேஷ் என்ற மகனும் உள்ளனர். துர்கேஷ் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி மல்லிகா மற்றும் துர்கேஷ் அவர்களுடைய கொட்டைமுந்திரி தோட்டத்திற்கு பூச்சி மருந்து தெளிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது பூச்சி மருந்தை முகர்ந்து பார்த்த சிறுவன் துர்கேஷ் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது தாயார் மல்லிகா உடனடியாக சிறுவனை மீட்டு ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக துர்கேஷை தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி துர்கேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜதானி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.