டிராக்டர் மீது மொபட் மோதிய விபத்தில் மனைவி கண் முன்னேயே கணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வாக்கூர் கிராமத்தில் குலசேகரன்- செல்வி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பனைபுரத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு குலசேகரன் தனது மனைவியுடன் மொபட்டில் புறப்பட்டுள்ளார். இவர்கள் தொரவி அரசு பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற டிராக்டர் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் டிராக்டர் மீது குலசேகரனின் மொபட் மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குலசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
மேலும் படுகாயம் அடைந்த செல்வியை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஒட்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விக்ரவாண்டி காவல்துறையினர் குலசேகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.