சவுதி அரேபியாவில் ஒவ்வொரு வருடமும் ஒட்டகங்களுக்கு அழகுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெரும் ஒட்டகத்தின் உரிமையாளருக்கு 499 கோடி வழங்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் வருடந்தோறும் நடக்கும் அழகு போட்டியில் மிகுந்த அழகுடைய ஒட்டகங்களை வளர்த்தவர்களுக்கு $66 மில்லியன் வழங்கப்படும். இது இந்திய மதிப்பில் சுமார் 499 கோடி ரூபாய் ஆகும். அதாவது அழகான ஒட்டகங்களை, அதன், தலை, கழுத்து, கூம்புகள் போன்றவற்றை வைத்து தேர்ந்தெடுப்பார்கள்.
அதன்படி இந்த வருடத்திற்கான, “ஒட்டக அழகுப் போட்டி” இந்த மாதம் ஆரம்பித்திருக்கிறது. எனவே, தலைநகரான ரியாத் நகரில் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் ஒரு மாதமாக இந்த திருவிழா நடக்கிறது. இந்நிலையில், தங்கள் ஒட்டகங்களை அழகாக்குவதற்கு சிலர் தவறான வழிகளை பின்பற்றுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், போட்டி அமைப்பாளர்கள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில் சுமார் 40-க்கும் அதிகமான ஒட்டகங்கள் அழகு போட்டியில் கலந்து கொள்ள தகுதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அழகு போட்டியில் ஒரே சமயத்தில் இத்தனை ஒட்டகங்களை தகுதி நீக்கம் செய்தது இதுதான் முதல் தடவை.
அதாவது, அழகு போட்டிகளில் தங்கள் ஒட்டகங்களை அழகாக காட்டுவதற்காக போடோக்ஸ் ஊசி செலுத்துவது, செயற்கையான முறையில் முகத்தை அழகுப்படுத்துவது போன்ற முறைகேடுகள் நடந்திருக்கிறது. எனவே, அழகு போட்டிகள் ஏற்பாடு செய்திருக்கும் அமைப்பு இவ்வாறான முறைகேடுகளை கட்டாயம் ஏற்க முடியாது என்று தெரிவித்துவிட்டது. மேலும், இதுபோன்று விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.