தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மெகா தடுப்பூசி முகாம்களை வாரம்தோறும் அரசு நடத்தி வருகிறது. தடுப்பூசி போடுவதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு கோடிப் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 82% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 48% 2 வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 14 வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கொரோனா இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வசதியாக இன்று ஒரு நாள் மட்டும் ஊதியத்துடன் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தில் 5,679 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் முறை தற்போது வந்துள்ளதால் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.