கடற்படை வீரரின் சடலமானது கப்பல் தளத்தில் இருந்து அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தளத்தில் ராயல் கடற்படை வீரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது கடந்த வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் நடந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அவசர சேவைகள் கப்பல் தளத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக ஸ்காட்லாந்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதில் “இறப்பிற்கான சரியான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக பிரேத பரிசோதனை நடத்தப்படும். அதிலும் தற்போதைய சூழலில் இது குறித்து விரிவான கருத்துக்கள் தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அடுத்த கட்ட விசாரணைகள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராயல் கடற்படை செய்தி தொடர்பாளர் செய்தி ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எங்களுக்கு இச்சம்பவம் குறித்து தெரிந்து இருப்பினும் இது தொடர்புடைய தெளிவான தகவல்களை இக்கட்டத்தில் கூற முடியாது” என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக ஸ்காட்லாந்தின் மேற்கில் உள்ள நேவல் பேஸ் க்ளைட்டில் செயல்படும் மூன்று ராயல் கப்பல் தளங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் பிரித்தானியாவின் நான்கு வான்கார்ட் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை உள்ளடக்கியது.