மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோட்டையடி கிராமத்தில் இருக்கும் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இந்த மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனை அகற்ற கோரி கடந்த 4-ஆம் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் தற்போது வரை அதிகாரிகள் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.