குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள கீழசொக்கநாதபுரம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிக்கவும் தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும் என மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும், போடி-தேவாரம் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போடி தாலுகா காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதியளித்த பின்னரே பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.