கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனிராஜ் சம்பள உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருத்தப்பட்ட ஊதிய உயர்வின் அடிப்படையில், அடிப்படை ஊதியம் 8,230 ரூபாயிலிருந்து 23,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பள உயர்வு கடந்த ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அகவிலைப்படியை 137% உயர்த்தப்பட்டு புதிய சம்பள விகிதத்தில் சேர்க்கப்பட்டு வழங்கப்படும். மேலும் ஓட்டுனர், நடத்துனர், மெக்கானிக் போன்ற பணிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பும், ஒராண்டு விடுமுறையும், 5,000 ரூபாய் உதவித் தொகையுடன் அளிக்கப்படும். சேவை பலன்களைப் பெறும்போது இந்த விடுப்பு காலமும் சேவை காலமாக கருதப்படும்.
குறைந்தபட்சம் 1,500 ரூபாயும் அதிகபட்சம் 5,000 ரூபாய் வரை வீட்டு வாடகைப்படி, 4% உயர்த்தப்படும். தொடர்ந்து இறப்பு மற்றும் ஓய்வுக்கான பணிக்கொடை 7,00,000 ரூபாயிலிருந்து 10,00,000 ரூபாயாக உயர்த்தப்படும். ஓய்வூதியத்தின் மாற்றி அமைக்கப்பட்ட மதிப்பு 10% இருக்கும் மேலும் மாதத்திற்கு 20 டியூட்டிகள் செய்யும் டிரைவர்களுக்கு 50 ரூபாய் கூடுதல் கட்டணமாகவும், 20-க்கு மேல் டியூட்டி செய்பவர்களுக்கு 100 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.