திருமணமாகி ஒரு மாதங்களிலேயே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள உலகதேவர் தெருவில் கவுதம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த மாதம் 10ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருந்த புவனேஸ்வரி கடந்த 3 நாட்களாக கணவர் உள்பட யாரிடமும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கவுதம் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது புவனேஸ்வரி கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு நேரமாகியும் திறக்காமல் உள்ளேயே இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் புவனேஸ்வரியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த உறவினர்கள் அங்கு சென்று கதவை உடைத்துள்ளனர். இதனைதொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது புவனேஸ்வரி தனது அறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக கம்பம் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் புவனேஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து புவனேஸ்வரியின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி ஒரு மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் கம்பம் ஆர்.டி.ஒ சாந்தியும் விசாரணை நடத்தி வருகின்றார்.