சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மோடமங்கலத்தை அடுத்துள்ள வால்ராஜபாளையம் பகுதியில் பழனிச்சாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் 6 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி பழனிச்சாமி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இதற்க்கான இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த பழனிச்சாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் பழனிச்சாமியை பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை சிறையில் அடைத்துள்ளனர்.