அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு பார்டர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஞ்சன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலராம் இவர் மனைவி நிம்புபாய். இவர்கள் உட்பட 98 பேர் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு சென்று வழிபடுவதற்காகவும், தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காகவும் ஊரடங்கு நடைமுறைக்கு முன்பு இந்தியா வந்தனர். புனித தலங்களுக்கு சென்று விட்டு பாகிஸ்தானில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து திரும்பினர்.
ஆனால் இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு அட்டாரியில் போதுமான ஆவணங்கள் இல்லை என கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் எல்லை அருகே இருந்த கூடாரங்களில் அவர்கள் தங்கி உள்ளனர். அவர்களுக்கான 3 வேளை உணவு உடை உள்ளிட்டவற்றை அந்த பகுதியில் உள்ள கிராமத்தினர் கொடுத்து உதவி வருகின்றனர். இந்நிலையில் நிம்புபாய் கர்ப்பமானார். கடந்த 2ஆம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது இதையடுத்து அட்டாரி எல்லைப் பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் அவருக்கு மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்தனர்.
நிம்புபாய்க்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பார்டரில் பிறந்ததால் பார்டர் என பெயர் சூட்டியுள்ளனர். இதேபோல் கடந்த ஆண்டு கூடாரத்தில் தங்கியிருக்கும் லக்கியாராம் என்பவருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு பாரத் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.