சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயற்சி செய்த வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தோகூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை காவல் நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியாக ஸ்கூட்டரில் 4 வாலிபர்கள் வந்தனர். அப்போது ஒரே ஸ்கூட்டரில் 4 பேர் வந்ததால் அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து முகவரியை கேட்டு எழுதிக்கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த வாலிபர்களில் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த இரும்பு ஆயுதத்தால் சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயற்சி செய்தார். இதனால் சுதாரித்துக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்து கொண்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 4 வாலிபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் தப்பி ஓடிய வாலிபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய வாலிபர்களில் ஒருவரான திருச்சி பெல் டவுன்சிப் பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் மகன் நரேஷ்ராஜூ என்பவரை பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் பிடித்தனர். இதனையடுத்து நரேஷ்ராஜூடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தப்பி ஓடியவர்கள் திருச்சி துவாக்குடி மலை பகுதியை சேர்ந்த ரூபன், அண்ணா வளைவு பகுதியை சேர்ந்த சாந்தகுமார், வினித் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நரேஷ்ராஜூவை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி தலைமையிலான குழுவினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் திருவெறும்பூரில் வினித்தை காவல்துறையினர் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இவ்வாறு தோகூர் போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டரை தாக்க முயற்சி செய்த சம்பவம் காவல்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.