இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .
நாகை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கஞ்சா ,குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலை தடுக்க நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஜவகர் தீவிர வாகன சோதனை உத்தரவிட்டார். இந்நிலையில் நாகை அடுத்துள்ள பாப்பாகோவில் ஏறுஞ்சாலை பகுதியில் நகர காவல் ஆய்வாளரான பெரியசாமி தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் 3 பேர் இரு சக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் வந்தனர். அவர்களை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவர்கள் கொண்டுவந்த மூட்டையை சோதனை செய்தனர் .
அப்போது அந்த மூட்டையில் 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது .இதையடுத்து அந்த 3 பேரிடம் விசாரணை நடத்தியதில் வேதாரண்யத்தை அடுத்துள்ள நாலுவேதபதி பகுதியை சேர்ந்த ரங்கநாதன், கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் தோப்புத்துறை பகுதியை சேர்ந்த ஹலித் என்பது தெரியவந்தது .இவர்கள் மூவரும் வேதாரண்யத்தில் இருந்து நாகையில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது .இதையடுத்து அந்த 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் .இதன் பிறகு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்திய சிறையில் அடைத்தனர்.