நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாட்டில் 127,61,83,065 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 9 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், மத்திய பிரதேசத்தில் டிசம்பர் மாத இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்தப்படும் என்ற இலக்கை அடைவோம் என்று உறுதி அளித்துள்ளார். முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இதுவரை 94% முதல் டோஸ் தடுப்பூசி மற்றும் 70% இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் இந்த மாதம் 8,15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.