கழிவறை கட்டுவதற்காக தோண்டப்பட்ட மழைநீர் தேங்கிய குழிக்குள் விழுந்து 2 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் ராமச்சந்திரன்-கனிமொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய ராம் பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ராம் பிரசாத் வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த போது கழிவறை கட்டுவதற்கான தோண்டப்பட்டு மழை நீர் நிரம்பிய குழிக்குள் தவறி விழுந்துவிட்டான். இதனால் மூச்சுத் திணறி ராம் பிரசாத் பரிதாபமாக உயிரிழந்து விட்டான். இதற்கிடையில் காணாமல் போன தனது மகனை கனிமொழி அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார்.
அப்போது ராம் பிரசாத் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பதை கண்டு கனிமொழி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.