பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான், இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சேவுடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட் என்னும் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் இலங்கையை சேர்ந்த,பிரியந்தா குமாரா தியாவதனா என்பவர் பொது மேலாளராக இருந்தார். அப்போது, அவரது அலுவலகத்தின் சுவருக்கு அருகில் அனுமதியில்லாமல் ஒட்டப்பட்டிருந்த தெஹ்ரீக் – இ – லபைக் என்ற அமைப்பினரின் மத பிரச்சார சுவரொட்டியை கிழித்து வீசிவிட்டார்.
இதனையறிந்த, தெஹ்ரீக் – இ – லபைக் அமைப்பை சேர்ந்தவர்கள், அவரை கடுமையாக தாக்கியதுடன், உயிருடன் தீவைத்து கொளுத்தினார்கள். இது தொடர்பில் 100 நபர்கள் கைதாகியுள்ளனர். இந்நிலையில், அவர் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இலங்கை பாராளுமன்றத்தில் அனைத்து கட்சியை சேர்ந்த எம்பிக்களின் ஆதரவுடன் கண்டன தீர்மானத்தை நிறைவேற்றினர்.
மேலும் பாகிஸ்தானில் வாழும் இலங்கையைச் சேர்ந்த மக்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று இத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை அதிபரான கோட்டபாய ராஜபக்சே தொலைபேசியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் பேசியிருக்கிறார்.
அப்போது, பிரியந்தாவை, கொடுமைப்படுத்தி கொலை செய்த சம்பவத்தில், பாகிஸ்தான் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்திருக்கிறார். மேலும், தற்போது வரை இச்சம்பவம் தொடர்பில் 113 நபர்கள் கைதாகி இருப்பதாகவும், சம்பவம் குறித்த வீடியோக்களை, பாதுகாப்பு அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும், பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருப்பதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் கூறியிருக்கிறது.