ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் முந்தையை ஆட்சியில் பணியாற்றிய பாதுகாப்பு அலுவலர்களை குறிவைத்து தாக்குவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு அங்கு வன்முறை அதிகரித்திருக்கிறது. மேலும், முந்தைய ஆட்சியில் நாட்டின், ராணுவம், காவல்துறை, புலனாய்வு போன்றவற்றில் பணியாற்றிய அலுவலர்கள் 47 பேர் காணாமல் போனதாக மனித உரிமை ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
எனவே, இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் பணியாற்றிய நபர்களை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் கொல்லப்படுவதும், திடீரென்று காணாமல் போவதும் மனித உரிமை மீறல்கள்.
தலிபான்கள் ஆட்சி அமைத்த சமயத்தில், நாடு முழுக்க பொது மன்னிப்பு அறிவிப்பதாக தெரிவித்தனர். அதனை, நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து வெளிப்படையாக விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் தடுக்க, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.