இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்டது. புதுப்புது கண்டுபிடிப்புகள் அறிமுகமாகி கொண்டு வருகிறது. இதனால் சில நன்மைகளும் தீமைகளும் கலந்தே இருக்கின்றன. இந்த நிலையில் காது கேளாதவர்கள் மற்றும் பெரு மூளை பாதித்து உணர்வுகளை பேச்சு மொழியில் வெளிப்படுத்த முடியாதவர்களுடைய நலனுக்காக சென்னை ஐஐடி டிஜிட்டல் கருவிகளை கண்டுபிடித்துள்ளது. ஸ்மார்ட் வாட்ச் போன்று இதனை கையில் கட்டி கொள்வதன் மூலம் காது கேட்கும் திறன் குறைந்தவர்கள் சில குறிப்பிட்ட பேச்சுக்கள் மற்றும் ஒலிகளை உடனடியாக இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
இந்த மின்னணு உபகரணம் குழந்தை அழும் சத்தம், அலாரம், வீட்டின் அழைப்பு மணி போன்ற பதிவு செய்யப்பட்ட பொதுவான ஒலிகளை அறிந்து அதை வைப்ரேஷன் வாயிலாக வெளிப்படுத்தும். இன்னொரு கருவியானது மூளை பாதிப்பால் பேச முடியாதவர்களுடைய உணர்வுகளை அவர்களின் காது வழியை அறிந்து அதை அவர்கள் வைத்திருக்கும் செல்போன் செயலி வழியே ஒலிக்கும். இதை மற்றவர்கள் கேட்டு அவர்களுடைய எண்ணத்தை தெரிந்து கொள்ளலாம். இதுகுறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் உபகரணங்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விக்கும், அவர்களின் வாழ்க்கை முறைக்கும் போதுமானதாக இல்லை என்பதனால் இது போன்ற டிஜிட்டல் உபகரணம் தயாரிக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.