ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிலில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இதற்காக ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்பதிவு அடிப்படையில் தினசரி 35,000 பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக ஆந்திராவில் கனமழை பெய்து வந்தது. இதனால் திருப்பதி கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் சிரமப்பட்டனர். அதனால் மழை குறையும் வரை பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வரவேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு மழை நின்ற பிறகு எப்போது வேண்டுமானாலும் திருப்பதி கோவிலுக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நவம்பர் 18 முதல் டிசம்பர் 10 வரை விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருமலைக்கு வர முடியாத நிலை இருந்தால் அவர்கள் தங்கள் தரிசனம் தேதியை வேறு தேதிக்கு மாற்றி கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதனால் பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.