காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவரும்,கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த சில நாளாக தன்னுடைய தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கல்பேட்டாவில் நடைபெற்ற படை வீரர்களின் கொடி நாள் கொண்டாட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்ற போது , ”நமது நாட்டில் தொடர்ச்சியாக சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக ஏற்படும் குற்றங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களும் தொடர்ந்து அதிகமாகி கொண்டே செல்கின்றது. பாலியல் பலாத்காரம், வன்கொடுமை என செய்தித்தாள்களில் நாள்தோறும் செய்திகள் அதிகரித்து கொண்டே வருகிறது.
வன்முறை சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருவதற்கு காரணம் தலித்துகள்,பழங்குடியினர் ,சிறுபான்மையினர்களுக்கு எதிராக கருத்துக்கள் பரப்பப்படுவதே காரணம் ஆகும். நாட்டினுடைய நிர்வாக கட்டமைப்பு சிதைந்து விட்டது. மக்கள் சட்டத்தை தங்களுடைய கைகளில் எடுத்துவிட்டனர். இதற்கு காரணம் என்னவெனில் நம் நாட்டை இயக்கிக் கொண்டிருக்கின்ற நபர் (பிரதமர் மோடி) வன்முறை, பிரிவினைவாத சக்திகளை நம்புவதே.இந்தியா உலகினுடைய கற்பழிப்பு தலைநகரமாக மாறிவிட்டது.
பெண்களை இந்தியாவில் வாழுகின்றவர்கள் எதற்காக மகள்கள், சகோதரிகள் என்ற பார்வையில் பார்க்க மறுக்கின்றார்கள்?.என்று அயல்நாடுகளை சேர்ந்தவர்கள் கேள்வி கேட்கின்றனர். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு பாஜக கட்சி எம்.எல்.ஏ. பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்டார். ஆனால் அதுபற்றி பிரதமர் மோடி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை’’ என்று கூறினார்.