என்கவுன்டரில் கொல்லப்பட்ட நால்வரின் உடல்களை பதப்படுத்தி பாதுகாத்து வைத்திட ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த திஷா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர், கிளீனர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் நேற்று ஹைதராபாத் காவல்துறையினர் என்கவுன்டர் செய்தனர்.
என்கவுன்டர் சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து எடுத்துக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து பல்வேறு கருத்துகள் பதிவு செய்யப்பட்டவரும் நிலையில், ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களின் உடலை டிசம்பர் 9ஆம் தேதி வரை பதப்படுத்தி பாதுகாத்து வைத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், உடற்கூறாய்வை வீடியோவாக எடுத்து மகபூப்நகர் மாவட்ட நீதிபதியிடம் சமர்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மனித உரிமை அமைப்பு ஒன்று என்கவுன்டருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. ஆனால், இந்த வழக்கை நீதிமன்றம் பொது நல வழக்காக எடுத்துக்கொண்டது.