தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பலரும் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அதனால் தமிழக அரசு வேலை இல்லா நிலையை போக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மாவட்டம்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் இன்று 50 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் மிகப்பெரிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் திட்டக்குடி ஸ்ரீ ஞான குரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம்.
மேலும் இந்த முகாமில் செவிலியர், ஐடிஐ முடித்தவர்கள், தொழில் பயிற்சி முடித்தவர்கள், பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், கணினி ஆபரேட்டர்கள், தையல் கலைஞர்கள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற அனைத்து விதமான தகுதி உடையவர்களும் பங்கேற்கலாம்.
இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணைய தள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இந்த முகாமிற்கு வரும் அனைவரும் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.