மழைநீர் தேங்கி நிற்பதால் தேங்காய் பறிக்க முடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக தென்னந்தோப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் அறுவடைக்கு தயாராக இருக்கும் தேங்காய்களை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது, தென்னை மரங்களின் வேர் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் வேரழுகல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலை நீடித்தால் தென்னை மரங்களின் காய்ப்புத்திறன் குறைந்து விடும் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.